
கொசு தொல்லையால் கோட்டக்குப்பம் மக்கள் அவதி! நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
கொசு தொல்லை தாங்க முடியலை…- கொசுக்களை ஒழிக்குமா கோட்டக்குப்பம் நகராட்சி …
கோட்டக்குப்பம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது.
கொசுக்களை ஒழிக்கும் மருந்துகளை, நகராட்சிப் பணியாளர்கள் முறையாக அடிப்பதில்லை என்று பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் கோட்டகுப்பதில் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் மழை மற்றும் சாக்கடை நீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. பல காலி மனைகளில் இன்னும் சாக்கடை தண்ணீர் தேங்கியே இருக்கிறது. மேலும் காலி மனைகள் குப்பை மேடாக இருப்பதால் கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளன.
இதனால், கோட்டக்குப்பம் பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கடியால் சரியாக தூங்க முடியவில்லை எனவும் கொசு மூலம் பல்வேறு நோய்கள் பரவலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து அடிப்பது, குளோரினேசன் செய்வது போன்ற பணிகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் கொசு தொல்லையை கட்டுப்படுத்தி, டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய் தொற்று பரவுவதில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.