
கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோட்டக் குப்பம் நகராட்சியில் தற்போது வரை குடிநீர் கட்டணம் செலுத்தாமல் சுமார் ரூ.87 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளது.
மேற்படி நிலுவைத் தொகையினை செலுத்துமாறு பொதுமக்களுக்கு நகராட்சி வரி வசூல் பணியா ளர்கள் மூலமாக நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் குடிநீர் கட்டண வசூலில் முன்னேற்றம் ஏதும் இல்லை. குடிநீர் கட்டண நிலுவைத் தொகை அதிகமாக உள்ளதால் துறை இயக்குநர் 11.01.2023 நடத்திய ஆய்வு கூட்டத்தில் 31.01.2023-க்குள் நிலுவைத் தொகையினை வசூல் செய்திட வேண்டும் என்றும் இல்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் நமது நகராட்சியில் குடிநீர் பராமரிப்புக்கு தொடர் செலவினங்களும் அதிகமாக ஏற்படுகிறது. நிலுவை அதிகமாக உள்ளதால் நிர்வாக சிக்கல் ஏற்படுவதாலும் மேலும் குடிநீர் கட்டணம் முழுமையாக வசூல் செய்தால் சிறப்பாக தடையின்றி குடிநீர் வழங்கலாம் என்பதாலும் அனைத்து வார்டுகளிலும் முதற்கட்டமாக 5000 ரூபாய்க்கு மேல் குடிநீர் கட்டணம் நிலுவைத் தொகை வைத்துள்ளவர்களின் 337 இணைப்புகள் விபரங்கள் கண்டறியப்பட்டு அந்த இணைப்புகளை இன்று முதல் படிப்படியாக துண்டிப்பு செய்திட பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவிற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.