

கோட்டக்குப்பம் அருகே, தடை செய்யப்பட்ட கடற்கரை பகுதியில் கடல் சறுக்கு விளையாட்டு பயிற்சி நடந்தது. இதை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் கடலில் துாண்டில் முள் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குளித்த பலர் கடல் நீர் சுழற்சியில் சிக்கி இறந்துள்ளனர்.
இதனால், இந்த பகுதியில் காவல் துறையினர் குளிக்க தடை விதித்து, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
மேலும், இரண்டு நாட்களுக்கு முன் வீசிய ‘மாண்டஸ்’ புயல் காரணமாக, இன்னமும் கடல் சீற்றமாக இருக்கிறது. இந்நிலையில், நேற்று காலை 8:00 மணிக்கு வெளிநாட்டைச் சேர்ந்த சறுக்கு விளையாட்டு பயிற்சியாளர், பலருக்கு கடலில் சறுக்கு விளையாட்டு பயிற்சி அளித்தார்.
அப்பகுதி மீனவர்கள் பயிற்சியாளரிடம், ‘விபத்து நடைபெறும் பகுதி; இங்கு கடல் சறுக்கு விளையாட வேண்டாம்’ என கூறியும், அவர் கண்டு கொள்ளாமல் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தினார். போலீசார் காலை நேரத்தில் ரோந்து சென்று, தடை செய்யப்பட்ட பகுதியில் பயிற்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.