
ரூ.930 கோடி மதிப்பீட்டில் ஜரூராக தொடங்கிய பணிகள் திட்டம் முழுமையடைந்தால் போக்குவரத்து நெரிசல் இருக்காதுசென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அதை 6 வழி சாலையாக மாற்றும் பணிகளை நெடுஞ்சாலை துறை தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இசிஆர் சாலை என்ற கிழக்கு கடற்கரை சாலையானது, சென்னையில் இருந்து 60 கி.மீ., தூரத்தில் உள்ள மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை சுமார் 135 கி.மீ தூரம் நீள்கிறது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மாமல்லபுரம் செல்ல இசிஆர் சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் தான் இன்டர்நேஷனல் பள்ளிகள், விஜிபி, எம்ஜிஎம் ஆகிய பொழுதுபோக்கு பூங்காக்கள், மாயாஜால், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, முதலைப் பண்ணை, மாமல்லபுரம், புதுச்சேரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. குறைந்த செலவில் சென்னை மக்கள் விரும்பி பார்க்கக் கூடிய இடங்கள் என்பதால் விடுமுறை நாட்களில் இசிஆர் சாலையில் வாகன போக்குவரத்து கணக்கிட முடியாத அளவுக்கு அதிகளவில் இருக்கும். இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லக்கூடிய நிலையை காணலாம். புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்ல வேண்டும் என்றாலும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், லட்சக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை தினமும் ஆக்கிரமித்து வருகின்றன. பொழுது போக்கு மற்றும் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் ஏராளமான கெஸ்ட் ஹவுஸ்கள் கட்டப்பட்டுள்ளன. உயர்தர வகுப்பினர்களும், இளைஞர்களும் வீக் எண்ட் பார்ட்டிகளை இசிஆர் சாலையில் கழிப்பதையே விரும்புகின்றனர். இதனால் காடு போன்ற காட்சியளித்த நிலங்கள் எல்லாம் இப்போது கட்டிடங்கள் நிறைந்ததாக கடற்கரை பகுதியாக காணப்படுகிறது.மேலும் இந்த சாலையில் திருவான்மியூர், வெட்டுவாங்ேகணி, நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் விஐபிகள் பலர் தங்கள் வீட்டு திருமணங்களை இந்த மண்டபங்களில் தான் நடத்துகின்றனர். இதனால் இசிஆர் ரோட்டில் எப்போதுமே கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். எனவே தான் இந்த சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2012ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பணியானது தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல் கட்ட நிலம் எடுப்பு பணிக்காக ரூ.930 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காகவே பணிகள் பல இடங்களில் விறுவிறுப்பாகவும் முடிந்தது. ஆனால், திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள 10.5 கி.மீ தூரம் உள்ள சாலை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. நிலத்தின் உரிமையாளர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். இந்த சிக்கலால் 6 வழிச்சாலை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இசிஆர் சாலையை 6 வழிசாலையாக மாற்றினால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தினர். இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க இறுதிக்கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு இசிஆர் சாலையை அகலபடுத்தும் வகையில் சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை மீண்டும் தொடங்கியுள்ளது. நேற்று முதல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடங்கியதால் 6 வழிச்சாலை அமைக்கும் திட்டம் வேகமெடுத்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இசிஆர் சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டால் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதோடு, விபத்துகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். இதனால் சென்னைவாசிகள் மட்டுமல்ல சுற்றுலாவாசிகளும் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இசிஆர் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம், அக்கரை போன்ற பகுதிகளில் சாலையோரத்தில் 50 முதல் 80 அடி வரை நிலம் எடுக்கப்பட உள்ளது. இதற்காக, சாலையோரம் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்புகளுக்கு நெடுஞ்சாலைத்துறை இறுதிகட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து கால அவகாசம் வழங்கி காலி செய்யப்பட்ட கடை, வீடுகள், வணிக வளாகங்களை நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு, நில எடுப்பு பணிக்கு சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாலவாக்கம் பகுதியில் மட்டும் 1.5கி.மீ., தூரத்துக்கு 100 அடி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கொட்டிவாக்கம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு நிலங்களை முழுமையாக கையகப்படுத்திய பின்னர் சாலை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம் கோரப்படும். அதை தொடர்ந்து பணிகள் முழுமையாக தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் ஆயத்த பணிகளுக்காக தற்போது ரூ.17 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இசிஆர் சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டால் பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதோடு, விபத்துகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்* சில நிமிடங்களில் கடக்கலாம்ஈசிஆரில் 6 வழிச்சாலை திட்டம் முழுமையாக நிறைவு பெறும் போது, திருவான்மியூரில் இருந்து அக்கரைக்கு சில நிமிடங்களுக்குள் சென்றுவிட முடியும். இப்போது அதே தூரத்தை கடக்க வேண்டுமானால் வழக்கமாக அரை மணி நேரம் ஆகும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த தூரத்தை கடக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆவது குறிப்பிடத்தக்கது.