
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு இப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. பிள்ளைச்சாவடிக்கு அருகில் உள்ள தந்திராயன் குப்பம், பொம்மையார்பாளையம் பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க தமிழக அரசு சார்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைச்சாவடி பகுதிகளில் கடல் அரிப்பு அதிகமாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகமானதால் பிள்ளைச்சாவடி கடற்கரையையொட்டியுள்ள குணசேகரன், சங்கர், பிரகாஷ், உள்பட 6 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளது. இது குறித்த மீனவர்கள் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கடல் அரிப்பை தடுக்க இப்பகுதியில் துண்டில் வளைவு அமைக்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.