

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, இதே நாளில் விடுதலை அடைந்தது.
புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவுக்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக #கோட்டக்குப்பம் முஸ்லிம்கள் தோழர் சுப்பையாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர். கோட்டக்குப்பத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வ.சுப்பையாவை அமர வைத்து 50 ஆயிரம் பேர் ஊர்வலமாக விடுதலைப் பெற்ற புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.
புதுவையை அடுத்த இந்திய யூனியன் பிரதேசத்தில் உள்ள கோட்டக்குப்பத்தில் சுப்பையாவின் போராட்டத்தளம் இருந்ததால், அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரள ஆரம்பித்து விட்டனர். முதல்நாளே சுப்பையாவை கோட்டக்குப்பம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று மாலையிட்டுப் பாராட்டினர். ‘வெற்றி விழாவை கோட்டக்குப்பம் முதலில் கொண்டாடுகிறது’ என பெருமைபட அவர்கள் கூறினர். முஸ்லிம் தாய்மார்களும் குழந்தைகளும் பெரியோர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பாராட்டிச் சென்றனர்.
நவம்பர் 1 ஆம் தேதி அதிகாலை 4 மணியில் இருந்தே பிரெஞ்சு – இந்திய எல்லையில் ஜன சமுத்திரம் திரள ஆரம்பித்துவிட்டது. பல கிராமங்களில் இருந்து தாரை தப்படைகள், சிலம்ப விளையாட்டு, பொம்மையாட்டம், கோமாளி, குறவன் குறத்தி, கோலாட்டம், பூச்சக்கரக்குட்டை, பரிவட்டம் கோலாகலங்களுடன் 2000 தொண்டர்கள் கைகோர்த்துச் செல்ல கோட்டக்குப்பத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.
“பிரெஞ்சுக்காரர்கள் பயப்படக்கூடிய ஒரு மனிதர் இருக்கிறார் என்றால், அவர் சுப்பையாதான். புதுச்சேரி யூனியன் எல்லையை கடந்து வந்து, இந்தியப் பகுதிக்குள் இருந்த தலைவர்களை பிரெஞ்சு – இந்திய காவல் துறையினர் அடிக்கடி கடத்திச் சென்றனர். ஆனால் கோட்டக்குப்பத்தில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த தோழர் சுப்பையாவை அவர்களால் நெருங்கக்கூட முடியவில்லை. எல்லையிலிருந்து ஒரு கல்லெறி தூரத்தில் தோழர் சுப்பையா இருந்தும்கூட அவர்களுக்குத் தைரியமில்லை” (தி ஹிந்து 1.11.1954)
(ஆதாரம் : ஜனசக்தியில் 1954 ஆம் ஆண்டு ஐ.மா.பா எழுதிய கட்டுரை..)