
வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவக்காததால் மாணவர்கள் போதிய வகுப்பறை இன்றி தவித்து வருகின்றனர்.
வானுார் பகுதியில் மொத்தம் 81 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு, விவசாயமும், புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளும் வாழ்வாதாரமாக உள்ளது.வானுார் வருவாய் கிராமங்களில், கழுப்பெரும்பாக்கம், திருச்சிற்றம்பலம், கோட்டக்குப்பம், வானுார், புளிச்சப்பள்ளம், உப்புவேலுார், கிளியனுார் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
வானுாரில் எந்த பகுதியிலும் அரசு கலைக்கல்லுாரிகள் இல்லை. இதனால் பள்ளி கல்வியை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், கல்லுாரி படிப்புக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர்.கல்லுாரிக்கு செல்ல விரும்பும் மாணவர்கள், 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திண்டிவனம், விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு கலை மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கும் நிலை இருந்துவந்தது.மேலும், தமிழகத்தையொட்டி அமைந்துள்ள புதுச்சேரியில் அரசு கல்லுாரிகள் இருந்தாலும், அந்த பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, வானுார் பகுதியில் ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், அரசு கலைக்கல்லுாரி ஏற்படுத்த வேண்டும் என பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.இதையடுத்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வானுாரில் அரசு கலைக்கல்லுாரி கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லுாரி துவங்கப்பட்டு, தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிறது.திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டத்தில் இயங்கும் இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டில் 295 மாணவர்கள் சேர்ந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த 2021ம் ஆண்டு 320 மாணவர்கள் சேர்ந்தனர்.முதல் இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 600 மாணவ, மாணவியர் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
தற்காலிக கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளாக கல்லுாரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, கடந்த ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. மயிலம் ரோடு சேதராப்பட்டு எல்லையில், திருச்சிற்றம்பலம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் 5 ஏக்கர் பரபரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியும் துவங்கப்பட்டது.
ஆனால், இதுவரையில் அரசு கல்லுாரி கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 13 கோடியே 11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை உயர் கல்வித்துறை அரசாணை வெளியிடாததால் அரசு கலைக்கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வரும் செப்டம்பரில் 2022ம் ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.
ஏற்கனவே சேர்ந்த மாணவர்களுக்கு ஷிப்ட் முறையில் நடத்துவதால், மாணவர்கள் போதி இட வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.தற்போது புதிய மாணவர்கள் சேர்ந்தால், மேலும் இட பற்றாக்குறை ஏற்படும். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கல்லுாரி நிர்வாகத்தினர் குழப்பமடைந்துள்ளனர்.எனவே மாணவர்களின் நலன் கருதி, அரசு விரைந்து புதிய கல்லுாரி கட்டடம் கட்ட நடவடிக்கை வேண்டும்.