கோட்டக்குப்பம் அருகே, கணவர் திருடிய நகைகளை உரியவரிடம் மனைவி ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், அமிர்தா கார்டனை சேர்ந்தவர் நசீமா, 58. இவர், கடந்த 3ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரிக்கு சென்றார்.
இரவு வீட்டிற்கு திரும்பியபோது, கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து, கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், திருட்டில் ஈடுபட்ட சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை தெருவை சேர்ந்த கொத்தனாரான அர்சுனன், 35, தனது மனைவி கலையரசியிடம் நகைகளை கொடுத்துள்ளார். அதற்கு கலையரசி, ‘இந்த நகைகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது’ என்று கேட்டுள்ளார். நசீமா வீட்டில் திருடியதாக, அர்சுனன் கூறியுள்ளார். திருடி கொண்டு வந்த நகை எனக்கு தேவையில்லை, நகைகளை உடனடியாக உரியவரிடம் கொடுத்துவிட்டு வருமாறு, கலையரசி கூறியுள்ளார்.
அர்சுனன் எந்த பதிலும் சொல்லாததால், நகைகளை வாங்கி கொண்ட கலையரசி தன் சகோதரன் மணிகண்டனுடன், நசீமா வீட்டிற்கு சென்று நகையை திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார். உடன் நசீமா கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, அர்சுனனை போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக கூறினார். பின், அர்சுனனை நிபந்தனை ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.கணவர் திருடிய நகைகளை மனைவி, உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.