
கோட்டக்குப்பம் ஓர் வரலாற்று சிறப்புமிக்க நகரம் என்பதுடன் பல்வேறு வசதி வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரூர். காலப்போக்கில் மக்களின் அலட்சியத்தாலும், நிர்வாகத்தினரின் கண்டு கொள்ளாமையாலும் பல்வேறு வசதிகள் தொடர்ந்து கோட்டகுப்பதை விட்டு சென்று விட்டன. இப்போதும் சென்று கொண்டிருக்கின்றன.
அதில் மக்களின் பயன்பாட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கக்கூடிய பேருந்து சேவைகளும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்துகள். இவ்வளவு பெரிய நகரத்திற்கு ஏன் போதுமான போக்குவரத்து சேவைகள் இல்லை என்பதை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் அந்த சேவைகள் கோட்டகுப்பத்துக்கு வரவேண்டும் என்பதற்காக வேண்டி பல்வேறு தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருக்கின்றது கோட்டக்குப்பம் செய்திகள் இணையத்தளம்.
அந்த அடிப்படையில் சமீபத்தில் கிடைத்த ஓர் அதிர்ச்சிகரமான, ஆச்சரியமான தகவல் என்னவென்றால், 1985ஆம் ஆண்டில் கோட்டகுப்பத்துக்கு என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளால் தொலைதூர நகரங்களில் இருந்து 10 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதுகுறித்த தகவல்களை விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.
மாநிலங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் போக்குவரத்து வாகனங்களை இயக்குவதைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும், மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 88(5) மற்றும் 88(6)ன் கீழ் கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாடு அரசு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ஒப்பந்தம் (Interstate Transport Agreement) செய்துள்ளது.
அந்த வகையில், மாநிலங்களுக்கிடையேயான வழித்தடங்களில் திறமையான, போதிய, சிக்கனமான மற்றும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட சாலைப் போக்குவரத்துச் சேவையை அளிக்கும் நோக்கத்திற்காக 1939ம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் எண் 4/1939), 63ம் பிரிவின் கீழ் தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்புக்கிடையில் பரிமாற்ற உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நலச் (போக்குவரத்து) செயலகத்தின் 09.03.1985ந் தேதியிட்ட அரசாணை பல்வகை எண் 3/85ல் பிறப்பிக்கப்பட்டு, 19.04.1985ந் தேதியிட்ட புதுச்சேரி அரசிதழ் (பகுதி-1 சிறப்பிதழ்) எண் 40ல் வெளியிடப்பட்டுள்ளது..
கோட்டக்குப்பம் பேருந்து அட்டவணை காண கீழே இருக்கும் சுட்டியை கிளிக் செய்யவும் 👇👇👇
அ. கோட்டகுப்பத்துக்கு அனுமதிக்கப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பு ஆகிய இரண்டுக்குமான ஒற்றை முனை வரி மற்றும் இரட்டை முனை வரி அடிப்படையில் மாநிலங்களுக்கிடையேயான உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்வதற்கு இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வழித்தடங்களில் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட பேருந்துகள்:
- தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை (பின்னிணைப்பு I – பகுதி A)
1.1 வ. எண். 33. கடலூர் முதல் மரக்காணம் வரை
வழி கோட்டக்குப்பம் – 1 பேருந்துகள் – 6 சிற்றிடைப் பயணங்கள்
1.2 வ. எண். 44 – பழங்காலத்துர் முதல் புதுச்சேரி வழி கோட்டக்குப்பம், திண்டிவானம், மரக்காணம் 1 பேருந்து – 2 இருவழிப் பயணங்கள்
1.3 வ. எண். 50 – திண்டிவானம் முதல் புதுச்சேரி வரை (வழி) கோட்டக்குப்பம், மரக்காணம் – 2 பேருந்து – 8 இருவழிப் பயணங்கள்
1.4 வ. எண். 60 – விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை (வழி) கோட்டக்குப்பம், திண்டிவானம், மரக்காணம் – 1 பேருந்து – 4 இருவழிப் பயணங்கள்
1.5 வ.எண் 61 – வைரபுரம் முதல் புதுச்சேரி வரை வழி கோட்டக்குப்பம், திண்டிவானம், முறுக்கேரி, நடுக்குப்பம் – 1 பேருந்து – 2 இருவழிப் பயணங்கள்
- புதுச்சேரி அரசுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை (பின்னிணைப்பு II – பகுதி A)
2.1 வ. எண். 17 கனகசெட்டிகுளம் முதல் கடலூர் வரை (வழி) கோட்டக்குப்பம், புதுச்சேரி, அரியாங்குப்பம் 1 பேருந்து – 2 இருவழிப் பயணங்கள்
2.2 வ. எண். 42 – மரக்காணம் முதல் திருக்கனுர் வரை (வழி) கூனிமேடு, காலாபட்டு, கோட்டக்குப்பம், – 1 பேருந்து – 2 இருவழிப் பயணங்கள்
2.3 வ. எண். 63 – புதுச்சேரி முதல் கடலூர் வரை (வழி) வில்லியனுர், மங்களம், பாகூர், கோட்டக்குப்பம் – 1 பேருந்து – 4 இருவழிப் பயணங்கள்.
2.3 வ. எண். 13 – பத்துக்கண்ணு முதல் கந்தாடு வரை வழி தொண்டமநத்தம், காலாபட்டு, கோட்டக்குப்பம் – 1 பேருந்து – 3 இருவழிப் பயணங்கள்.
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் கோட்டகுப்பத்துக்கு 10 பேருந்துகளும், 34 இருவழிப் பயணங்கள் இயக்குவதற்கு உடன்படிக்கையில் இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால், பிற அனைத்து வழித்தடங்களிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இவற்றில் பல இதுநாள் வரை கோட்டக்குப்பம் வழியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பாக இயக்கப்படவில்லை என்பதுதான் மிகப்பெரும் வேதனையான தகவல்.
ஆகவே, கோட்டக்குப்பம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்களின் நலனை கருதி தமிழ்நாடு அரசு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கிடையேயான உடன்படிக்கையில் இரண்டு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட வழித்தடங்களில் கோட்டக்குப்பம் நகரத்துக்கு அனுமதிக்கப்பட்ட பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என கோட்டக்குப்பம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
தொகுப்பு : கோட்டக்குப்பம் இணையத்தளம்