
ஜூன் மாத இறுதிக்குள் கோட்டக்குப்பம் ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரித்துக் கொடுக்க ஆவன செய்யப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் நடந்த சுமூக பேச்சு வார்த்தையில் வானூர் தாசில்தார் உறுதி…
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட, 1515 குடும்ப அட்டைகள் கொண்ட ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்கக் கோரியும், அனைத்து வேலை நாட்களிலும் நியாயவிலைக் கடையைத் திறக்கக் கோரியும், பயோ மெட்ரிக் கருவியை சரியான முறையில் செயல்படுத்தக் கோரியும் மற்றும் இரண்டாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் எண் நியாய விலைக் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாளை (20.05.2022) கோட்டக்குப்பம் கோவில்மேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது..
இதனிடையில் இன்று 19.05.2022 மாலை 4 மணியளவில் வானூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் வானூர் வட்டாச்சியர் திரு பிரபு வெங்கடேசன் (பொறுப்பு) அவர்கள் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சுமூக பேச்சுவார்த்தைக்கு வானூர் வட்ட வழங்கல் அலுவலர் திரு. ராதா கிருஷ்ணன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சுமூக பேச்சுவார்தை முடிவில் ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை வரும் ஜூன் மாத இறுதிக்குள் பிரித்துத் தரப்படும் எனவும் அதற்கான கள ஆய்வை வரும் சனிக்கிழமையே (21.05.2022) தொடங்கப்படும் எனவும், எல்லா வேலை நாட்களிலும் கடைகள் திறக்கப்படும் எனவும் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது..
வானூர் தாசில்தார் திரு பிரபு வெங்கடேசன் (பொறுப்பு) தலைமையில் நடந்த சுமூக பேச்சு வார்த்தையில் கூட்டுறவு சார்பதிவாளர் திரு செல்வகுமார் வானூர் வட்ட வழங்கல் அலுவலர் திரு ராதாகிருஷ்ணன் கோட்டக்குப்பம் உதவி ஆய்வாளர் முத்துக்குமரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர் முத்துக்குமரன், சே. அறிவழகன், வட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகன், வட்ட க்குழு உறுப்பினர்கள் அன்சாரி பாலமுருகன், கோட்டக்குப்பம் நகர செயலாளர் முகமது அனஸ் மற்றும் முபாரக், முகமது யாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

