
ஒருவர் வீட்டில் இறந்துவிட்டால், அவரது இறப்புக்கான காரணத்தைக் கூறி, அதற்கான விண்ணப்பத்தில் சான்று அளித்தாலே உள்ளாட்சி அமைப்புகள் இறப்புச் சான்று வழங்கலாம். ஆனால், உள்ளாட்சி அமைப்பினர் மருத்துவர் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறுவது தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பை பதிவு செய்தால் மட்டுமே அரசு நிதியுதவி கிடைக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. சொத்துகளையும் எந்த வில்லங்கமும் இல்லாமல் வாரிசுகள் பத்திரப்பதிவு செய்துகொள்ள முடியும். அதனால், பொதுமக்கள் தற்போது இந்த சான்றிழை பெறுவதற்காக சிரத்தை எடுத்து விண்ணப்பிக்கின்றனர். ஒருவர் இறந்த 21 நாளில், அவரது இறப்பு சான்றிதழுக்காக உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இயற்கை மரணம் அடைந்தால் மருத்துவர் சான்றிதழ் ஏதுமின்றி அப்படியே பதிவு செய்வர். மருத்துவமனைகளில் இறந்தால் மருத்துவர்கள், மருத்துவச் சான்றை வழங்குவர். அதை வைத்து, உள்ளாட்சி அமைப்புகளில் இறப்புச் சான்று பெற்றுவிடலாம். ஆனால், 60 வயதுக்குக்கீழ் வீட்டில் இறந்தால் அதை உறுதிப்படுத்த மருத்துவர் சான்று கட்டாயம்.
ஒருவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுகள் இறப்புச் சான்றிதழை பெற்றால்தான் இறந்தவரின் பெயரில் உள்ள பட்டா, வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு, அரசு உதவிகள் போன்றவற்றை பெற முடியும். அதனால், வாரிசுகளுக்கு இறப்புச் சான்றிதழ் முக்கியமான ஆவணம் ஆகும்.