
புதுச்சேரியில் இருந்து வாரந்தோறும் திங்கள் அதிகாலை முதல் காலை 10 மணி வரையிலும் சென்னைக்கு அதிகளவில் பயணிகள் செல்கின்றனர். இதனால் அங்கு இருக்கைகள் பிடிக்க நெரிசல் ஏற்படுவதோடு, பயணிகளின் உடமைகள் இந்நாட்களில் அதிகளவில் திருட்டு போவதாகவும் காவல்துறை தலைமைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சீனியர் எஸ்பி தீபிகா உத்தரவின் பேரில் எஸ்ஐ சந்திரசேகர் தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்திய போலீசார், சந்தேகத்துக்கிடமான வகையில் அங்கு சுற்றிய சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.வாகன தணிக்கை: புதுச்சேரியில் இருந்து வார இறுதி நாட்களில் தமிழக பகுதிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதோடு வாகன திருட்டுகளும் அதிகளவில் நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை எஸ்ஐ சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் கோட்டக்குப்பம் எல்லையை ஒட்டிய புதுச்சேரி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார்கள், பைக்குகளை நிறுத்தி அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். ரவுடிகளின் நடமாட்டத்தையும் கண்காணித்து சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.