
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி சில நாட்களில் வழக்கத்தைவிட அதிகம் சுட்டெரித்து வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு கத்தரி வெயில் நீடிக்க உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் , புதுச்சேரி மாநிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவில் திடிரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயிலால் வீட்டில் முடங்கிய மக்களுக்கு வெப்பச்சலனம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.