
நல்லாத்தான் இருந்தார், திடீர்னு செத்துப் போயிட்டாரு’, என்று ஒருவர் சொல்ல, `மாரடைப்பாதான் இருக்கும்… வேறென்ன ?’ என்று இன்னொருவர் பதில் சொல்வார். இதுபோன்ற உரையாடல்களை அடிக்கடிக் கேட்டிருப்போம். திடீரென்று ஒருவர் உயிரிழந்தால், அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்திருப்பார் என்று அனைவரின் மனதிலும் பதிந்து போயிருக்கிறது. இந்த எண்ணம் ஒரு நல்லதையும் செய்திருக்கிறது. நெஞ்சுவலி வந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு பெருகியிருக்கிறது. நெஞ்சுவலியைப் போலவே திடீரென்று உயிரைப் பறிக்கும் மற்றொரு பாதிப்பும் உண்டு. அது குறித்த போதுமான விழிப்பு உணர்வு மக்களிடம் இல்லை. அதுதான் கோடைக்காலத்தில் ஏற்படும் ‘சன் ஸ்ட்ரோக்’ (Sun Stroke) மிக ஆபத்தானது. இதை ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) என்றும் சொல்லலாம்.
பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் மயங்கிவிழுவது கோடைக்காலத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்று. கோடை வெப்பம் தாங்காமல் பலர் உயிரிழக்கவும் செய்வார்கள். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 100-க்கும் மேற்பட்டோர் நேரடியாக ‘ஹீட் ஸ்ட்ரோக்’கால் உயிரிழக்கிறார்கள். சாதாரண பாதிப்புதான் என்று அலட்சியமாக இருப்பதால் பலர் உயிரிழக்கிறார்கள். இதைப் பற்றி போதிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம்.
“ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்வது எப்படி, ஏற்பட்டுவிட்டால் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன?’’ ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையின் நரம்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் லஷ்மி நரசிம்மனிடம் கேட்டோம்…
அதிக வெப்பத்தின் காரணமாக, நம் உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து போவதுதான் ‘ஹீட் ஸ்ட்ரோக்.’ நம் உடலின் உள் வெப்பநிலையும், பிஹெச்-ம் (pH) எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும். ரத்தமும் உறையாமலிருக்கும். நம் உடலில் ரத்த சுழற்சிக்கு வெப்பம் மிக அவசியம். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் அப்படியே உறைந்துவிடும். நம் உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் (Thermostat) இருக்கிறது. சுற்றுப்புறச்சூழலில் வெப்பம் அதிகரிக்கும்போது, நம் உடலின் உள்வெப்பநிலையும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதைத் தடுப்பதற்காக, வியர்வையின் மூலமாகவும், தோல்களின் வழியாகவும் வெப்பத்தை வெளியேற்றும் வேலையை இது செய்கிறது. குளிரான பிரதேசத்தில் இருக்கும்போது நம் உடலிலிருந்து வெப்பம் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளும். இப்படித் தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.
இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்து (Breakdown) போகும் நிலைக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்று பெயர். அதற்குப் பிறகு நம் உடலின் உள்வெப்பநிலை கட்டுக்குள் இருக்காது. 106, 107… 112… என மிக உச்சநிலையை அடையும். ‘ஹைப்பர் பைரெக்ஸியா’ (Hiperpirexia) என்னும் அதிகமான காய்ச்சல் உண்டாகும். நினைவிழப்பு ஏற்படும்’’ என்ற லெஷ்மி நரசிம்மனிடம்,
“ஹீட் ஸ்ட்ரோக் எப்போது உண்டாகும்?’’ என்று கேட்டோம்.
“இதில் இரண்டு வகைகள் உள்ளன. நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Non exertional heat stroke) மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Exertional heat stroke).
எந்தச் செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவது நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Non Exertional Heat Stroke). வெறுமனே, உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே இது உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும்.
வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுவது எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Exertional heat stroke) இள வயதுக்காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இது உண்டாகும்.
‘சன் ஸ்ட்ரோக்’ வராமல் தடுக்க என்ன வழி ?
* அதிக வெப்பமான இடங்களில் இருக்கக் கூடாது. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறினால், ரத்தத்தில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டம் தடைப்பட்டு, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைத்துக்கொள்ளும்.
* சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* வெப்பத்தை உட்கிரகிக்கும் உடைகளை அணியக் கூடாது.
* உடலுக்குக் குளிர்ச்சி தரும், நீர்சத்துகள் நிறைந்த பழ வகைகளைச் சாப்பிடவேண்டும்.
சன் ஸ்ட்ரோக்கால் ஒருவர் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும். அழைத்துச் செல்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஐஸ் க்யூபை அக்குளில், கழுத்தில், தொடைக்கிடையில் வைக்க வேண்டும் அல்லது ஈரத்துணியை நன்றாகப் பிழிந்து உடலின் மீது போர்த்த வேண்டும். இதனால், உடலின் வெப்பநிலை குறைய வாய்ப்புண்டு. இதை ஒரு முதலுதவியாக மட்டுமே செய்ய வேண்டும்… கவனம்!
குழந்தைகளுக்கு தெர்மோஸ்டாட் வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் கோடைக்காலத்தில் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு தெர்மோஸ்டாட் செயலிழந்து போயிருக்கும். அதனால் அவர்களும் கவனமாக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு ‘தெர்மாஸ்டாட்’ நல்லநிலையில் இருந்தாலும், புறச் செயல்பாடுகளின் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வெப்பத்தை உதாசீனப்படுத்தாமல் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்’’ என்கிறார் லஷ்மி நரசிம்மன்.
Credit : The Vikatan