
விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலானதால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தமிழகத்தில் இன்று தொடங்கி வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை சுமார் 60 நாட்களுக்கு மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் விசைப்படகுகள் பயன்படுத்தியோ அல்லது இழுவைப் படகுகள் பயன்படுத்திய மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என அரசு தடை விதித்துள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரையை ஒட்டியுள்ள கூனிமேடுக்குப்பம், கைப்பாணிக்குப்பம், அனுமந்தைக்குப்பம், கோட்டக்குப்பம், எக்கியார்குப்பம், பெரிய முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், நாரவாக்கம் உள்ளிட்ட 18 மீனவக் கிராமங்களில் வசித்து வரும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
அதனால் தங்களது படகுகளை மீனவர்கள் கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது பெட்ரோல் டீசல் உள்ளிட்ட விலைவாசிகள் உயர்ந்துள்ளது. அதனை மீனவர்கள் மேற்கோள்காட்டி தமிழக அரசிடம் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
மேலும் அவர்களது படகுகளை நிறுத்தி வைப்பதற்கு வசதியாக மரக்காணத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.