
வண்டி ஓட்டும் சிறுவன்
கோட்டகுப்பதில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது, சில பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்து ஓட்டவிடுகிறார்கள். அவர்கள் அதிக வேகத்தில் வாகனத்தை கட்டுபாடு இல்லாமல் ஓட்டிச்செல்கிறார்கள். மேலும் ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கிறார்கள். வார விடுமுறையில் அதிகளவில் சிறுவர்கள் வாகனத்தில் பறப்பதை காணலாம்.
இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். விலை மதிக்க முடியாத உயிரோடு ஒருபோதும் விளையாடக் கூடாது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தொடர்பாகப் பெற்றோர்கள்தான் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்குத் தெரியாமல் பிள்ளைகள் வாகனம் இயக்க முடியாது.
மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக 18 வயது பூர்த்தியாகாத மைனர் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் காப்பீட்டு நிறுவன இழப்பீடு வழங்காது.
18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயது வரை லைசென்ஸ் பெற இயலாது என்றும் இது தொடர்பாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உச்சபட்சமாக 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோருக்கு 25 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை பெற்றோர் மற்றும் காவல் துறை எடுக்க வேண்டும்.