
கோட்டக்குப்பம் அடுத்த கொழுவாரியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கொழுவாரி கிராமம் உள்ளது. இங்கு 2010ல் தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.பத்து ஆண்டுகளுக்குப் பின், தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சமத்துவபுரம் கட்டுமானப் பணி நடந்து முடிந்தது. 8 ஏக்கர் பரப்பளவில், 6 ஏக்கரில் 100 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
ஒரு வீடு 241 சதுர அடியில், 2.88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு விளையாட்டு பூங்கா, தார் சாலைகள், நுாலகம், குடிநீர் உட்பட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.இதற்கான திறப்பு விழா நேற்று காலை நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண் பயனாளி ஒருவரை அழைத்து அவரிடம் ரிப்பன் வெட்டச் சொல்லி, திறந்து வைத்தார்.தொடர்ந்து சமத்துவபுரத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்து மலர் துாவி மரியாதை செலுத்தினார்.பின் பயனாளி சுப்புராயன் மனைவி சரளா என்பவரது வீட்டை பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி மைய கட்டடம், சிறுவர் பூங்காவை பார்வையிட்டார்.கைப்பந்து விளையாட்டு திடலுக்குச் சென்று விளையாட்டு வீரர்களுடன் கலைந்துரையாடினார். விழா முடிவில் பயனாளிகளுடன் நினைவு புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் எடுத்து கொண்டார்.