
இடிந்து விழுந்தது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் தற்போது காந்தி பீடம் அமைந்துள்ள இடத்தில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் துறைமுகம் செயல்பட்டது. இதற்காக பாலம் கட்டப்பட்டிருந்தது. புதுச்சேரியின் கடற்கரையில் கடந்த 1861ம் ஆண்டு கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. கடற்கரையில் இருந்து கடல் நோக்கி 192 மீட்டர் நீளத்துக்கு பாலம் அமைந்தது. ஆறு ஆண்டு பணிகள் நடந்தது. 1866ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கடல்பாலம் திறக்கப்பட்டது. 1952ல் வீசிய புயலில் புதுவை துறைமுகமும், கடல் பாலமும் முற்றிலும் மறைந்து போனது. தற்போது காந்தி சிலைக்கு பின்னே சிறு கம்பிகளாக கடல் பாலத்தின் சாட்சிகளாக அக்கால கம்பிகள் உள்ளன.
அது புயலால் சேதமடைந்து விழுந்ததால் சுதந்திரத்திற்கு பிறகு வம்பாகீரப்பாளையத்தில் இரண்டாவது முறையாக, துறைமுகம் கட்டும் பணி 23.11.1956 தொடங்கியது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு 26.10.1962ல் தற்போது உள்ள இப்பாலம் திறக்கப்பட்டது. அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ்பகதுார் திறந்து வைத்தார். கட்டுமான தொகை 41 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய். சுதந்திரத்திற்கு பிறகு கட்டப்பட்ட புதுச்சேரி பழைய துறைமுக பாலம் சிதிலமடைந்தால், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை துறைமுக துறை கைவிட்டது. பழைய துறைமுகத்தையும், அங்குள்ள பாலத்தையும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கண்டு களித்து வந்தனர்.
சினிமா படங்களும் படமாக்கப்பட்டன. குறிப்பாக ஹாலிவுட் படமான லைப் ஆஃப் பை, சூர்யாவின் மவுனம் பேசியதே, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, எதிர்நீச்சல், விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் தொடங்கி தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்கள் இங்கு படப்பிடிப்பு நடந்துள்ளன. துறைமுக பாலத்தில் பல லட்சத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.
பாரம்பரியமிக்க பழைய துறைமுகம் பாலத்தின் மேற்பரப்பு ‘பளபளப்பாக இருந்தாலும் அடிப்பகுதி எலும்பு கூண்டு போன்று பலவீனமாக இருந்ததே உண்மை. பாலத்திற்காக கடலில் இறக்கப்பட்ட கான்கிரிட் தூண்கள் சேதமடைந்திருந்ததை அரசு அறிந்திருந்தது. பழைய பாலம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்ததால் இப்பகுதியில் மக்கள் நுழைய தடையும் உள்ளது. இருப்பினும் மிக முக்கியமான விஐபிகள் மட்டுமே காலை, இரவு நேரங்களில் இப்பாலத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை இப்பாலம் இடிந்து விழுந்தது. இப்பகுதி மீனவர்கள் கூறுகையில், “பாலம் மேல்பகுதியில் பல லட்சம் செலவு செய்து அலங்காரத்தை அரசு செய்திருந்தது. ஆனால் கீழே தூண்கள் மோசமாக இருந்ததை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் வழக்கமாக இங்கு மீன்பிடித்து வைப்போம். இன்று அதிகாலை பாலத்தின் மீது இருந்து வழக்கமாக வலைவீசி மீன்பிடித்து கொண்டிருந்தோம். கடல் சீற்றம் அதிகமாக இருந்தபோது பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. மீனவர்கள் பத்திரமாக தப்பிவிட்டோம். அலங்கார பாலம் மட்டும் இடிந்துவிட்டது” என்றனர் சோகத்துடன்.