
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் கோட்டக்குப்பம் நகராட்சியும் ஒன்று. பேரூராட்சியாக இருந்து சமீபத்தில் தான் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. இந்த நகராட்சியில் முதல் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகின்றது.
மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டு, சுயேட்சை கள் என மொத்தம் 145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
27 வார்டுகளில் ஒரு வார்டுக்கு மட்டும் 2 வாக்குச்சாவடிகளும் மற்ற வார்டுகளுக்கு ஒரு வாக்குசாவடி என மொத்தம் 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் 27 வார்டுகளிலும் விருவிருப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. வாக்காளர்கள் வந்து வாக்கு செலுத்த ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும் வாக்குச்சாவடிக்குள் வரும் வாக்காளர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக முககவசம் அணிவதை அதிகாரிகள் உறுதி செய்து கொண்டு, வாக்காளர்கள் உள்ளே வரும்போதே உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் கிருமிநாசினிகள் கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்பு வாக்காளர்களிடம் கையுரை வழங்கப்பட்ட பின்பே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 200&க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றார்கள்.