






கோட்டக்குப்பம் நகராட்சிக்கு தேர்தல் நாளை (19-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கடைசி ஒருமணி நேரம் (5 மணி முதல் 6 மணிவரை) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இத்தேர்தல் நடைபெறுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் வசதி, சக்கர நாற்காளி மற்றும் உதவி செய்வதற்கு ஊழியர் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்று பரவுவதால் வாக்குச்சாவடிகளில் வெப்பமானி, கிருமிநாசினி, முககவசம், கையுறைகள், பாதுகாப்பு கவசம், பஞ்சு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி.. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கையாக பதட்டமான வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுண்பார்வையாளர்கள் தேர்தல் களத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.