கோட்டக்குப்பம் நகராட்சி தேர்தலில், இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெற உள்ள நிலையில் வீதிகள் தோறும் பிரசாரம் சூடுபிடித்தது. கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தமுள்ள, 27 வார்டுகளில், கட்சி மற்றும் சுயேச்சை என, 145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோட்டக்குப்பம் நகராட்சியின் முக்கிய வீதிகளில் வேட்பாளர்கள் நேற்று வெயிலையும் பொருட்படுத்தாது தொடர்ந்து வீடு வீடாக பிரசாரம் செய்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துக்கொண்டு வீதிகள் தோறும் வலம் வந்தனர். பெரிய, சின்ன கோட்டக்குப்பம், பெரிய, சின்ன முதலியார் சாவடி, பரக்கத் நகர் ECR ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க.,வினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு சென்றனர். ஒரே நேரத்தில் அனைத்து வேட்பாளர்களும் களத்தில் இறங்கி ஓட்டு வேட்டையாடியதால், நகர் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
