
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வானூர் தொகுதியை அ.தி.மு.க .கைப்பற்றியது. எனவே நகராட்சியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க.வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேநேரம் சட்டமன்ற தொகுதிகளில் கோட்டை விட்டதால் நகராட்சியை கைப்பற்ற தி.மு.க.வினரும் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். மூன்றாவதாக சுயேட்சை வேட்பாளரும் களத்தில் முந்திவருகிறார்.
மூன்று தரப்பினரும் வீடு வீடாக சென்று வாக்குறுதிகளை நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரிக்கின்றனர். இது தவிர சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். முகநூல், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் தங்கள் ஆதரவாளர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு போன் செய்து வாக்கு பதிவு தினத்தில் தவறாமல் வந்து வாக்களிக்கும்படி வேட்பாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சில வேட்பாளர்கள் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கான போக்குவரத்து செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி அழைக்கின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கு கூட வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை தவறாமல் பெறுவதற்கு வேட்பாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கோட்டக்குப்பம் நகராட்சியில் அரசியல் கட்சியினரும் சுயேச்சைகளும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் கோட்டக்குப்பம் பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.