
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை முதல் முன்பதிவின்றி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த ஜன., 18ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவில் நோயாளிகள் அனுமதிக்கப்பட வில்லை. மொபைல்போன் மூலம் முன்பதிவு செய்து, டாக்டர் அனுமதி கொடுத்த பின்பே நோயாளிகள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது புதுச்சேரி, தமிழகத்தில் தொற்று பரவல் வெகுவாக குறையத் துவங்கி உள்ளதால் ஜிப்மரில் வெளிப்புற நோயாளி சிகிச்சை பிரிவு முன்பதிவு இன்றி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்பர் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகளுக்கு அமல்படுத்தப்பட்ட விதிமுறைகள் நாளை 7ம் தேதி முதல் தளர்த்தப்படுகின்றன. நோயாளிகள் முன்பதிவு இன்றி நேரடியாக வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வரலாம். முன்பதிவு மற்றும் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகள் நாளை 7ம் தேதி முதல் நிறுத்தப்படும்.நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.