
கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்துவந்த கோட்டக்குப்பம், விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தை தொடர்ந்து, சமீபத்தில் கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் கோட்டக்குப்பம் நகராட்சியாக முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறது. பேரூராட்சியில் வெறும் 18 வார்டுகள் மட்டுமே இருந்துவந்த நிலையில் நகராட்சியான பிறகு 27 வார்டுகளாக உயர்ந்தது.
முதல் முறை தேர்தல் என்பதால் பலர் தேர்தலில் போட்டி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிறிய கட்சிகள் தங்கள் வாக்குபலத்தை தெரிந்து கொள்ள இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சொந்த கட்சிக்காக இதுவரை வேலை செய்தவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டதால் பலர் கட்சி நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக
சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். மேலும் கூட்டணி கட்சியினருக்கும் உரிய சீட் மறுக்கப்பட்டதால் சுயேட்சையாக போட்டிபோடுவதால், வேட்பாளர்கள் எண்ணிக்கை தாறுமாறாக எகிறியுள்ளது. பாரம்பரிய நகராட்சியான விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தை விட அதிக நபர்கள் கோட்டகுப்பதில் வேட்புமனு தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (4-ந்தேதி) கடைசியாகும். ஒரு நாள் மட்டுமே இருப்பதால் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து வருகிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு ஈடாக சுயேட்சைகளும் களம் இறங்குகிறார்கள்.
இன்று ஒரு நாள் மட்டும் 75 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர், இவா்களுடன் சோ்த்து இதுவரை கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 139-ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் விழுப்புரத்தில் 106 பேர் மற்றும் திண்டிவனத்தில் 127 மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.