
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்த கட்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா., காங்கிரஸ் உட்பட, 11 கட்சிகள் பதிவு செய்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என சின்னத்துடன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பதிவு செய்யப்பட்ட 296 கட்சிகள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் பயன்படுத்த 30 வகையான சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கிடார், அடையாள குறி, மறை திருக்கி, வைரம், உலக உருண்டை, முகம் பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி, புட்டி, ஊஞ்சல், நீளக்குவளை, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகு ஆணி, மேல்சட்டை (கோட்டு), கோப்பு அடுக்கும் அலமாரி, முள் கரண்டி, கொதி கெண்டி(கெட்டில்), ஆக்கி மட்டையும் பந்தும், மகளிர் பணப்பை, மேஜை விளக்கு, கொம்பு (இசை கருவி), கைப்பை, தீப்பெட்டி, கழுத்துக்கச்சை (கழுத்தில் கட்டும் டை), அலமாரி, குலையுடன் கூடிய தென்னைமரம், அரிக்கன் விளக்கு, கரண்டி, தண்ணீர் குழாய், உலாவிற்கான தடி ஆகிய 30 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நிரந்தர சின்னம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். சுயேச்சைகள் தலா 3 சின்னங்களில் ஒன்றை கோரலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர் ஒரே சின்னத்தை கேட்டிருந்தால் குலுக்கல்முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.
3 சின்னங்களும் பிறருக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அனைவருக்கும் ஒதுக்கியது போக மீதியுள்ள ஒரு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.