
தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் 23,673 பேர் வாக்களிக்க உள்ளதாக ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் வார்டு வரையறை, வாக்குச்சாவடிகள் இறுதிப்பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று, அனைத்துஅங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மோகன் வெளியிட்டார்..
அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்காக கடந்த 1.11.2021 நாளிட்ட ஒருங்கிணைந்த சட்டமன்ற வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாக்காளர் பட்டியல்களின்படி, கோட்டக்குப்பம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 11,581 பேர், பெண் வாக்காளர்கள் 12,090 பேர், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 23,673 வாக்காளர்கள் உள்ளனர். கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் பட்டியல்கள் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.