
சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் இனத்தை சார்ந்தவர்களுக்கு மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.
இதற்கு வயது வரம்பு 20 முதல் 45 வரை ஆகும். தையல் கலை பயின்றவராகவும் இருக்க வேண்டும். தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆண்டு வருமான உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மேலும் ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே விண்ணப்பிக்க முடியும்.
உணவு இல்லாமல் தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கி உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்கள்
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தேவையான விவரங்களை கேட்டு அறிந்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மோகன் வலியுறுத்தியுள்ளார்.