
புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கோட்டக்குப்பம் நகராட்சியில் வார்டு மறுவரையறையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சியினர் கண்டனம் தீர்மானம் இயற்றினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சியாக திகழ்ந்த கோட்டக்குப்பம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பயனாக தற்போது கோட்டக்குப்பம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதியதாக உருவாக்கப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியில் சமீபத்தில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, வார்டுகளின் எண்ணிக்கை 18 ல் இருந்து 27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களை கணக்கில் எடுக்காமல் வீடுகளை கணக்கில் எடுத்து வார்டு மறுவரையறை செய்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டக்குப்பம் நகராட்சி வார்டு மறுவரையறை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கோட்டகுப்பதில் இன்று முக்கிய அரசியல் கட்சியினர் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதை அதிகாரிகள் ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தே மு தி க, மதிமுக, அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.