
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சியின் வரைவு வாா்டுகள் மறுவரையறை குறித்த ஆட்சேபனைகளை அரசியல் கட்சியினா், பொதுமக்கள் வருகிற 24-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்து தற்பொது நிலை உயா்த்தப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சியின் வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பொதுமக்கள், அரசியல் கட்சியினரின் பாா்வைக்கு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் வருகிற 24-ஆம் தேதி வரை மாவட்ட மறுவரையறை அலுவலரிடம் மனுவாக அளிக்கலாம்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள மறுவரையறை ஆணையத்தின் கூட்டத்தில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஆட்சேபனைகள், கருத்துகள் கேட்கப்படவுள்ளன.
மேலும், கோட்டக்குப்பம் நகராட்சி வரைவு வாா்டு மறுவரையறை கருத்துருக்களின் மீது ஆட்சேபனைகள் இருப்பின் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டத்திலும் நேரடியாகவோ அல்லது மனுவாகவோ அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.