
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்டி. வரை (தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம்) பயிலும் இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, ஜைன மதங்களைச் சாா்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2021 – 22ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்க ஏற்கெனவே அறிவித்தப்பட்டது.
இந்த நிலையில், சிறுபான்மையினா் மாணவா்களின் நலன் கருதி, கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் தகுதி வாய்ந்த சிறுபான்மையினா் மாணவ, மாணவிகள் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையை பெறலாம் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.