
புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் அமைப்புத் தலைவர் ரகுபதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு அருகில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 14191.30 சதுர மீட்டர் கட்டடத்தில் செயல்பட்டு வரும் சர்க்கிள் தி பாண்டிச்சேரிக்கு (Circle De Pondicherry) வெறும் ரூ.3,283/- மாத வாடகையாக வசூலித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியிட்டிருந்தோம்.
அத்துடன் அந்த இடத்துக்கு தற்போதைய மதிப்பீட்டின்படி மாத வாடகையை உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் கடந்த 09.08.2006 முதல் தொடர்ந்து மனு கொடுத்து வந்ததன் அடிப்படையில், AG Audit 20.01.2009 அன்று பொதுப்பணித்துறை வாடகையை உயர்த்தி வசூலிக்காதது குறித்து ஆட்சேபனை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் வாடகையை உயர்த்தி வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதுகுறித்து மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் 08.12.2020-ல் தகவல்கள் கேட்டதற்கு ஒருசில தகவல்களை மட்டும் அளித்தனர். அதேபோல தற்போது, 16.09.2021 அன்று மீண்டும் இதுகுறித்து தகவல்கள் கேட்டதற்கு 12 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் வாடகையை நிர்ணயம் செய்வதற்கான கோப்பு அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் இது சம்பந்தமாக எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின்படி 04.07.2011 தேதியிட்ட குறிப்பாணைப்படி சர்க்கிள் தி பாண்டிச்சேரிக்கு ஜூலை 1978 முதல் நவம்பர் 2004 வரையிலான நிலுவைத் தொகை ரூ.5.22 லட்சம்.
டிசம்பர் 2004 முதல் ஜனவரி 2009 வரை நிலுவைத் தொகை ரூ.1,62,000/- என 6,84,416/- லட்ச ரூபாயை வசூலிக்கவும், குறிப்பாக 18.10.2010 மதிப்பீட்டின்படி 10,71,745/- லட்ச ரூபாய் மாத வாடகை நிர்ணயம் செய்து 01.07.2011 முதல் இந்த தொகையினை வசூலிக்கவும், இதற்கு புதிய வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ளவும், துணை மாவட்ட ஆட்சியர் (வடக்கு) அறிவித்திருக்கிறார். அதை நிதித்துறைக்கு அனுப்பிய பொதுப்பணித்துறையினர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நிலுவைத் தொகையை வசூலிக்கவோ, வாடகையை உயர்த்தி வசூலிக்கவோ, புதிய வாடகை ஒப்பந்தம் செய்யவோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இதன்மூலம் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் அரசுக்கு சுமார் 14,64,41,736/- கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் ஏதேனும் லஞ்சம் பெற்றுக்கொண்டு 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமலிருந்துள்ளனரோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. எனவே, நிலுவைத் தொகை மற்றும் வருவாய்த்துறை நிர்ணயம் செய்த மாத வாடகையை வசூலிக்காமலும், புதிய வாடகை ஒப்பந்தம் போடாமலும் 10 ஆண்டுகள் அலட்சியமாக இருந்து அரசுக்குப் பல கோடி வருமானம் இழப்பு ஏற்படுத்தியிருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரியில் அரசின் அனைத்து முக்கியத் துறைகளும் நிதித் தட்டுப்பாட்டால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் சாலை போடுவதற்குக் கூட நிதியின்றி கையை பிசைந்து கொண்டிருக்கிறது பொதுப்பணித்துறை. குண்டும் குழியுமான சாலைகளில் அன்றாடம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கின்றனர் பொதுமக்கள். நிலைமை இப்படி இருக்கும்போது தங்கள் துறைக்கு வரவேண்டிய வாடகையைக் கூட வசூலிக்க முடியாத அளவுக்கு அலட்சியத்துடன் இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Credit : vikatan