ஆரோவில் காடுகள அழிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ்


ஆரோவில் காடுகள் அழிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் சர்ச்சைக்குரிய கிரவுன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அங்கு வாழும் மக்களின் எதிர்ப்பையும் மீறி 500-க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கும், ஆரோவில் பசுமைப் பரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்க்கூடிய ஆரோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 3930 ஏக்கர் நிலப் பரப்பில் ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கப்பட்டுள்ளது. 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த பன்னாட்டு நகரத்தில் 1150 ஏக்கரில் நகரப் பகுதியும், 2780 ஏக்கர் பரப்பளவில் பசுமைப்பகுதியும் அமைந்துள்ளன. ஆரோவில் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால், சர்ச்சைக்குரிய கிரவுன் எனப்படும் திட்டத்திற்கான சாலை அமைப்பதற்காக அங்குள்ள மரங்களை அடியோடு சாய்க்கும் நடவடிக்கைகளை பன்னாட்டு நகர வளர்ச்சிக்குழு மேற்கொண்டிருக்கிறது. ஆரோவில் நகரத்தின் மையப்பகுதியில் 500 மரங்களை வெட்டுவதற்கு திட்டமிட்டுள்ள நகர வளர்ச்சிக் குழு, அதன் ஒரு கட்டமாக நேற்று மட்டும் ஜே.சி.பி எந்திரங்களின் உதவியுடன் 30 பெரு மரங்களை சாய்த்திருக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள குடியிருப்பாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதையேற்று மரங்களை வெட்டும் பணி கைவிடப்படுவதாக அறிவித்த நகர வளர்ச்சிக் குழு இன்று மீண்டும் மரங்களை வெட்டும் பணியை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நகர வளர்ச்சிக் குழுவின் போக்கு சரியானதல்ல. ஆரோவில் நகரத்தில் எந்தத் திட்டத்தை செயல்படுத்தினாலும், அதற்கு ஆரோவில் குடியிருப்பாளர்கள் அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்திற்கு அத்தகைய ஒப்புதல் எதுவும் பெறப்படவில்லை. மரங்களை வெட்டினால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மரங்களை வெட்டுவதால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்ததையடுத்து கிரவுன் திட்டத்திற்கான சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க அங்கு வாழும் மக்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நிர்வாகத்தில் உள்ள சில குழுக்கள் தங்கள் விருப்பப்படி சாலை அமைப்பதற்காக காடுகளை அழிப்பதாகத் தெரிகிறது. ஆரோவில் பன்னாட்டு நகரத்தின் சிறப்பே அதன் அமைதியும், பசுமையும் தான். ஆரோவில் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியும், பரபரப்பும் நிறைந்தவை என்றாலும் கூட பன்னாட்டு நகரத்திற்குள் அவற்றின் சுவடுகளை பார்க்க முடியாது. வளர்ச்சியால் ஏற்படும் எந்த சீரழிவும் ஆரோவில் நகரத்திற்குள் இதுவரை நுழைந்ததில்லை. இயற்கையுடன் இணைந்து, குறைந்த நுகர்வு, குறைந்த கழிவு என்ற நோக்கத்துடன் ஆற்றல் வளங்களை வீணாக்காமல் வாழ வேண்டும் என்பது தான் ஆரோவில் நகரின் தத்துவம் ஆகும். அங்கு மகிழுந்துகள் கூட ஒரு கட்டத்திற்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. மிதி வண்டி தான் அதிகம் பயன்படுத்தப்படும் ஊர்தி ஆகும். அந்த அளவுக்கு அங்கு அமைதி பாதுகாக்கப்படுகிறது. ஆரோவில் நகரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வாழ முடியும் என்றாலும், இதுவரை 54 நாடுகளைச் சேர்ந்த 2814 பேர் மட்டுமே அங்கு வாழ்கின்றனர். பசுமை சொர்க்கம் என்று போற்றப்படும் ஆரோவில் நகரத்தின் காடுகளை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அழிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. ஆரோவில் நகரத்தில் 500 மரங்களை சாய்க்கப்படுவது சகித்துக் கொள்ள முடியாததாகும்; இது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. புவிவெப்பமயமாதல் குறித்த அச்சம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. புவிவெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தவும், அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்கவும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் ஆரோவில் நகரத்தில் 500 பெரிய மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, ஆரோவில் நகரத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆணையிட வேண்டும். தமிழக அரசும் இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s