
பாரதி ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் (Prepadi) சேவைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியில் ஆரோக்கியமான வணிகத்தை மேற்கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரீபெய்ட் அழைப்புக் கட்டணம் 20 முதல் 25 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் டேடா (Data) கட்டணம் 20 முதல் 21 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு ஒரு தனிநபர் பயன்பாடு மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கம் என்றும் இதன் மூலம் அலைக்கற்றை மற்றும் தொலைதொடர் இணைப்பு போன்றவற்றிற்கு தேவையான முதலீடுகிடைக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 26 ஆம் தேதி முதல் நடைமுறையில் வரவுள்ள இந்த விலை உயர்வின் மூலம் கிடைக்கும் வருவாய், இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கவும் பயன்படுத்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தற்பேது ரூ.79 திட்டம் ரூ.99 ஆகவும், ரூ.149 திட்டம் ரூ.179 ஆகவும், ரூ.1498 திட்டம் ரூ.1799 ஆகவும், ரூ.2,498 திட்டம் ரூ.2,999 ஆகவும் விலை உயர்த்தப்படலாம் என்று தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடஃபோன் – ஐடியா நிறுவனமும் விலையை உயர்த்தவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாகுறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த செப்டம்பர் மாதம் தொலை தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகைக்கான கால அவகாசத்தை நான்கு ஆண்டுகள் வரை நீட்டித்தும், அந்நிய நேரடி முதலீட்டை 100% அதிகரித்தும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
இது தொடர்பாக தொலைதொடர்புத்துறை அமைச்சர், அஷ்வினி வைஷ்னவ், செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், “ இன்றைய தினம் (15.09.21) பிரதமர் நரேந்திர மோடி, மொத்த வருவாயில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை (AGR) அரசுக்கு செலுத்த வேண்டும் எனும் விதியில் ஒரு சிறப்பு வாய்ந்த முடிவை எடுத்த்துள்ளார். ஒரு நிறுவனத்தில், தொலைதொடர்புத்துறையை சாராத வருமானங்கள் மொத்த வரி வருவாயில் சேர்த்துக் கொள்ளப்படாது. ஒரு காலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிகமான வட்டி, உரிமத்துக்கான கட்டணம், அலைக்கற்றைக்கான கட்டணம், அபராதம், அபராதத்துக்கான வட்டி என கடும் விதிகள் இருந்தன. இது தற்போது சீர்திருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைதொடர்பு துறையில் அதிகளவிலான முதலீடுகள் கிடைக்கும். முதலீடுகள் என்றால் வேலைவாய்ப்பு, எவ்வளவு அதிகம் முதலீடுகள் அதிகரிக்கிறதோ அவ்வளவு அதிகமாக வேலைவாய்புகள் உருவாகும்” என்று கூறினார்.
தொலைதொடர்பு அமைச்சகத்தின் தரவுகளின் படி, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்கள் அரசு வழங்கியுள்ள உரிமத்திற்காக ரூ 92,000 கோடியும், அலைக்கற்றைக்காக (Spectrum) ரூ 41,000 கோடியும் செலுத்த வேண்டும் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.