

கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடி கடற்கரை பகுதியில் கவர்னர் தமிழிசை ஆய்வு செய்தார்.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஆரோவில், சின்னமுதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி, கோட்டக்குப்பம் பகுதி களில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடலில் கற்கள் கொட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடல் அரிப்பினால் பிள்ளைச்சாவடி, சின்னக்காலாப்பட்டு, பெரியக்காலாப்பட்டு பகுதிகளும் தற்போது பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
நேற்று கடல் சீற்றம் காரணமாக பிள்ளைச் சாவடியில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டது. 300 மீட்டர் சிமெண்ட் சாலை சேதமடைந்ததுடன், 40 தென்னை மரங்கள் சாய்ந்தன.கடற்கரையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவ வீடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவர்னர் தமிழிசை, தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆகியோர் நேற்று மதியம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கவர்னர் தமிழிசை, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்கை அங்கிருந்தே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
காலாப்பட்டு தொகுதி கடற்கரை கிராமங்கள் தொடர்ந்து கடல் அரிப்பிற்குள்ளாகி வருகிறது. இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.,கல்யாணசுந்தரம் தங்களை சந்தித்து மனு அளித்துள்ளார். எனவே என்.ஐ.ஓ.டி., மற்றும் என்.சி.சி.ஆர்., என்கிற மத்திய அரசு நிறுவனங்களின் உதவியுடன் துாண்டில் முள் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும். கடல் அரிப்பு பாதிப்புகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்வையிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங், புதுச்சேரி கடலோர பகுதி கடல் அரிப்பினை ஏற்கனவே சாட்டிலைட் மூலம் அறிந்து வைத்துள்ளேன். விரைவில் என்.ஐ.ஓ.டி., அனுப்பி துாண்டில் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்ட நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித் தார். தொடர்ந்து 1.30 மணியளவில் கவர்னர் தமிழிசை தனது ஆய்வினை முடித்துக் கொண்டு புறப்பட்டார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், கிழக்கு எஸ்.பி., தீபிகா உடனிருந்தனர்.