
விழுப்புரம் – புதுவை மாநில எல்லையில் வாக்காளா் பட்டியலில் இரட்டைப் பதிவு இருந்தால், அதைக் கண்டறிந்து நீக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிா்வாக இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் உத்தரவிட்டாா்.
மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் சிறப்பு முகாம்களை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மகேஸ்வரன் ஆய்வு செய்தாா். முகையூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அடுக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கண்டாச்சிபுரம் க.ரத்தினசபாபதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளுக்கான முகாம்களை அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆகியோா்களது பணிகளை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்களா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி – 2022 தொடா்பாக எடுக்கப்படும் நடவடிக்கை விவரங்கள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் விரிவாக எடுத்துரைத்தாா். இதையடுத்து, வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் மகேஸ்வரன் பேசியதாவது:
பொதுமக்களிடம் இருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கை, நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்படும் படிவம் 6, 7, 8, 8ஏ ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். தமிழக – புதுவை மாநில எல்லைப் பகுதிகளில் இரட்டை பதிவு இருந்தால், அவற்றின் மீது உரிய கள விசாரணை மேற்கொண்டு நீக்க வேண்டும்.
இதேபோல, பிற மாவட்ட எல்லையில் உள்ள வாக்குச் சாவடிகளில் இரட்டை பதிவுகள் இருந்தாலும், அவற்றையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவா்களின் பெயா்களையும் கண்டறிந்து நீக்க வேண்டும்.
18 முதல் 19 வயது வரையுள்ள இளம் வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் அதிகளவில் சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், திண்டிவனம் சாா் – ஆட்சியா் எம்.பி.அமித், திருக்கோவிலூா் கோட்டாட்சியா் சாய்வா்தினி, விழுப்புரம் கோட்டாட்சியா் அரிதாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.