
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கான 2 நாள் சிறப்பு முகாம் இன்று சனிக்கிழமை (நவ.13) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2022-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன்படி, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் வருகிற 30-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெறும்.
வாக்காளா்களை பட்டியலில் பெயா் சோ்ப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய தொகுதிகளுக்குள்பட்ட 1,962 வாக்குச் சாவடிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.13, 14) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் வாக்காளா்கள், புதிய வாக்காளா்கள் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை உரிய படிவங்களில் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேலும், இந்திய தோ்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளா் சேவை மைய தொலைபேசி எண் 1950-ஐ வேலை நாள்களில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.