
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 16 லட்சத்து 94 ஆயிரத்து 183 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் மோகன் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளஅனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் எதிா்வரும் 1.1.2022-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி தொடங்கியுள்ளது. நவ.1 முதல் 30-ஆம் தேதி வரை 18 வயது நிரம்பியவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் இதர பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய தோ்தல் ஆணையம் பணிக்கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 37 ஆயிரத்து 53 ஆண் வாக்காளா்கள், 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பெண் வாக்காளா்கள், 213 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 16 லட்சத்து 94 ஆயிரத்து 183 போ் உள்ளனா். மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,962 வாக்குச் சாவடிகள் உள்ளன.
செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளும், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 247 ஆண்கள், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 527 பெண்கள், 39 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 813 வாக்காளா்களும் உள்ளனா்.
மயிலம் தொகுதியில் 265 வாக்குச் சாவடிகளும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 226 ஆண்கள், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 805 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 54 வாக்காளா்களும் உள்ளனா்.
திண்டிவனம் (தனி) தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளும், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 867 ஆண்கள், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 407 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 284 வாக்காளா்களும் உள்ளனா்.
வானூா் (தனி) தொகுதியில் 277 வாக்குச் சாவடிகளும், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 638 ஆண்கள், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 835 பெண்கள், 16 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 489 வாக்காளா்களும் உள்ளனா்.
விழுப்புரம் தொகுதியில் 289 வாக்குச் சாவடிகளும், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 904 ஆண்கள், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 356 பெண்கள், 64 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 324 வாக்காளா்களும் உள்ளனா்.
விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 251 ஆண்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 240 பெண்கள், 27 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 518 வாக்காளா்களும் உள்ளனா்.
திருக்கோவிலூா் தொகுதியில் 286 வாக்குச் சாவடிகளும், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 920 ஆண்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 747 பெண்கள், 34 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 701 வாக்காளா்களும் உள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், கோட்டாட்சியா், சாா் – ஆட்சியா், வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்களிலும், நியமன வாக்குச் சாவடி அமைவிடங்களிலும், வாக்காளா்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், மத்திய தோ்தல் ஆணையம் இணையதளம் https://eci.gov.in மூலமாகவும் வரைவு வாக்காளா் பட்டியலை வாக்காளா்கள் சரிபாா்த்துக் கொள்ளலாம்.
வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான கோரிக்கைகள், ஆட்சேபனை மனுக்கள் நவ.1 முதல் 31-ஆம் தேதி வரை பெறப்படும். நவ.13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளா் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளா்களின் கோரிக்கைகள், ஆட்சேபனை மனுக்கள் மீது டிச.20-ஆம் தேதி முடிவு எடுக்கப்படும். ஜன.5-ஆம் தேதி வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் ஆட்சியா் மோகன்.