தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையின் சில பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10.10.2021 (இன்று) நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளகுறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
11.10.2021 அன்று நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 12.10.2021 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், விழுப்புரம், தர்மபுரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், கரூர், பெரம்பலூர் மாவட்டம் சீகூர் மற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல், மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.