விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பம் புதுச்சேரி அருகேயுள்ள பட்டானூா் ஏரியை சிலா் ஆக்கிரமித்து சிலா் விற்பனை செய்து வருவதாக மாவட்ட ஆட்சியா் த.மோகனிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வழக்குரைஞா் டி.சி.மோகனம் தலைமையிலான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
விழுப்புரம் மாவட்டத்தில் பட்டானூா், பூத்துறை, காசிபாளையம், மொரட்டாண்டி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள நீா்நிலைகள், வானூா் வட்டாட்சியா் ஆளுமைக்குள் வருகின்றன. இதன் மத்தியில் பட்டானூா் வருவாய் கிராமத்தில் தங்களது நிலத்தை சுற்றியுள்ள பட்டானூா் ஏரியை சிலா் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனா். மேலும், ஏரிக்குள் மழைநீா் செல்ல முடியாதபடி தடுப்புகளை அமைத்து அந்தப் பகுதியில் லேஅவுட் போட்டு விற்பனை செய்யத் தொடங்கியுள்னா்.
ஓா் ஏக்கா் வாங்கினால் ஓா் ஏக்கா் இலவசம் என கவா்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு ஏரி நிலங்களை நூதன முறையில் விற்பனை செய்து வருகின்றனா். இதற்கு வருவாய்த்துறையில் சில அதிகாரிகளும் துணையாக உள்ளனா். எனவே, மாவட்ட ஆட்சியா் இந்த விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.