
சென்னை துறைமுகத்தில் இருந்து, புதுச்சேரி, கடலுார், நாகை மற்றும் காரைக்கால் இடையேயான பயணியர் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து, அடுத்த ஐந்து மாதங்களில் துவங்க உள்ளது.
‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறது. நாட்டின் 7,500 கி.மீ., கடலோர பகுதியில், படகு போக்குவரத்தை மேம்படுத்தும் முன்னணி திட்டமாக, ‘சாகர்மாலா’ திட்டம் உள்ளது. இதில் ஓர் அம்சமாக, பல வழித்தடங்களில் ‘ரோ-ரோ, ரோ-பேக்ஸ்’ என்ற சரக்கு மற்றும் பயணியர் கப்பல் சேவைகளுக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வர்த்தக ரீதியிலான இந்த முயற்சியை அமல்படுத்துவதற்கான வழித்தடங்களை அடையாளம் காண, தனியார் நிறுவனங்களை, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. தினசரி பயணம் மேற்கொள்பவர்கள், சுற்றுலா பயணியர், சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு, இந்த துணை போக்குவரத்து பயனுள்ளதாக இருக்கும்.இந்நிலையில், சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், நாகை, காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து அறிமுகமாக உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.பயணியரும் செல்லலாம்
இதுகுறித்து, சென்னை துறைமுக நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:சென்னை துறைமுகத்தில் ‘ரோரோ, ரோபேக்ஸ்’ என்ற கப்பல் சேவை, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில், கார்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதில், பயணியரும் செல்லலாம். இந்த வசதியை மற்ற துறைமுகங்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில், கப்பலை இயக்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தோம்.சென்னை துறைமுகத்திற்கு, பயணியர் கப்பல் வந்து செல்கிறது. புதுச்சேரியிலும் 4 மீ., ஆழத்தில் கப்பல் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது.
கடலுார் துறைமுகத்திலும், 9 மீட்டர் ஆழம், 240 மீ., நீளத்தில், கப்பல் நிறுத்துமிடம், செப்டம்பரில் தயாராகி விடும். இதில், 120 மீ., நீளமுடைய இரண்டு கப்பல்களை நிறுத்தலாம். அதேமாதிரி, காரைக்கால் துறைமுகத்தில் 130 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்தும் தளம் உள்ளது. இங்கிருந்து கொழும்பு – காரைக்கால் – சென்னை கப்பல் போக்குவரத்தை இயக்கும் திட்டமும் உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், நாகை மற்றும் காரைக்கால் இடையே, ரோரோ, ரோபேக்ஸ் கப்பல்கள் இயக்குவது குறித்து, நடந்த முதற்கட்ட ஆலோசனையில், விருப்பமுள்ள ஐந்து நிறுவனங்கள் பங்கேற்றன. இதற்காக துறைமுகத்தில் செய்ய வேண்டிய வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
நெரிசலும் குறையும் ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பின், ஆப்பரேட்டர்கள் விரைந்து வரும் பட்சத்தில், இந்த வசதி அடுத்த ஐந்து மாதத்தில் துவங்கும்.இதன் வாயிலாக, சென்னையில் இருந்து கப்பலில் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். சாலை நெரிசலும் குறையும். துறைமுகங்களில் தேவையான வசதிகள் உள்ளன. எந்த மாதிரியான கப்பல் வருகிறது என்பதை பொறுத்து,இத்திட்டத்தின் பட்ஜெட் இறுதி வடிவம் பெறும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.