
கோட்டக்குப்பம் பெயரில்லா தெருக்கள்…
கோட்டக்குப்பம் பேரூராட்சி வளர்ச்சியடைந்து வருகிறது. புதியதாக உருவான பெரும்பாலான தெருக்களுக்கு, முறையாக பெயர் சூட்டாததால் பலரும் முகவரியை குறிப்பிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
கோட்டக்குப்பம் ஊரின் உள்ளே மற்றும் வெளிப்புற அனைத்துப்பகுதிகளும், வேகமாக விரிவாக்கமடைந்து வருகிறது. ஆண்டுக்கு சற்று ஏறக்குறைய 50 முதல் நூறு வீடுகள் வரை, புதிதாக கட்டப்படுகின்றன. ஏராளமான தெருக்கள் உருவாகின்றன. ஒரு சில பகுதியில், அப்பகுதியில் உள்ளவர்கள், அவர்களாகவே ஒரு பெயரை வைத்து அழைக்கின்றனர். தெருக்களுக்கு முறையான பெயர் வைக்காததால், தபால், அரசு அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களில், பகுதி பெயரை மட்டும் பதிவு செய்கின்றனர். உதாரணத்திற்கு, கதவு எண் மற்றும் பகுதி பெயரை மட்டும் எழுதுகின்றனர். எந்த தெரு என குறிப்பிட முடியவில்லை. தெரு பெயர் இல்லாததால், போஸ்ட் மேனும் தட்டு தடுமாறுகிறார். தபால்கள் பட்டுவாடா செய்யும் போது, கதவு எண்ணை மட்டும் வைத்து கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதால், திருப்பி அனுப்பும் நிலை நீடித்து வருகிறது. முக்கிய தபால்கள் கிடைப்பதில், சிக்கல் நீடிப்பதால், அனைத்து தெருக்களுக்கும் முறையாக பெயர்களை சூட்டி, அடையாளம் காட்ட கோட்டக்குப்பம் பேரூராட்சி முன் வர வேண்டும்.

