
கொரோனா 2-ம் அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் பொது போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது தொற்று படிப்படியாக குறைந்ததால் தமிழகம்- புதுவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டுள்ளன.
2 மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. ஆனாலும், புதுவையில் ஆரம்பத்தில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. தனியார் பஸ்கள் இயக்கவில்லை. தற்போது படிப்படியாக தனியார் பஸ்கள் இயங்க தொடங்கி உள்ளது.
இருப்பினும் 2 மாநில அரசின் நிர்வாக அனுமதி சிக்கல்களால் தமிழகத்தில் இருந்து புதுவைக்கும், புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பஸ் சேவைக்கு தமிழக அரசின் அனுமதி கிடைக்கவில்லை.
தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் குறிப்பிட்ட சில பஸ்கள் மட்டும் புதுவை மாநில எல்லை வரை வந்து பயணிகளை இறக்கி விடுகின்றன.
இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.தமிழகத்தில் இருந்து புதுவைக்குள் பஸ்கள் சென்று வரவும், புதுவையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் செல்லவும் இரு மாநில அரசின் நிர்வாக அனுமதி தேவைப்படுகிறது.
இதற்கான அனுமதி கிடைக்காததால் புதுவையில் இருந்து 120 அரசு மற்றும் தனியார் பஸ்கள் தமிழகத்துக்குள் செல்ல முடியவில்லை.
தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் மற்றும் புதுவை வழியாக செல்லும் 600 பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதற்கிடையே புதுவை போக்குவரத்து துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி பஸ் போக்குவரத்தை அனுமதிக்குமாறு கோரி உள்ளனர். இதற்கு பதில் இன்னமும் கிடைக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழகத்துக்குள் புதுவை பஸ்களை இயக்க அனுமதிக்க கோரி புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தொலைபேசியில் பேசி நிலைமையை விளக்கி பஸ் சேவைக்கு உடனே அனுமதிக்குமாறும் வலியுறுத்தி உள்ளார்.
அதேபோல் தமிழக பஸ்களை, அனுமதிக்க தயாராக இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழக அரசின் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பு வெளியாகும் 12-ந் தேதிக்கு பிறகு தமிழகம், புதுவையை சேர்ந்த அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.