விழுப்புரம் மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையளிக்க கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது. இந்தக் கட்டணத்தில் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி தனியாா் மருத்துவமனைகளிலும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
இந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 2 மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் இ.எஸ். மருத்துவமனை, இ.எஸ். செவிலியா் கல்லூரி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் கரோனாவுக்கான கட்டணம் இல்லாமல் சிகிச்சைப் பெறலாம்.
கட்டண விவரம்: தனியாா் மருத்துவமனையியல் அளிக்கப்படும் வசதிக்கேற்ப கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிராண வாயு இல்லாத படுக்கை வசதி (ஆக்ஸிஜன் இல்லாத) – ஏ 3 முதல் ஏ 6 வரை தரவரிசையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.5,000, ஏ 1 முதல் ஏ 2 வரை தரவரிசையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.7,000 கட்டணமாகும்.
பிராண வாயுவுடன் கூடிய படுக்கை வசதி (ஆக்ஸிஜன் கொண்ட) – நாளொன்றுக்கு ரூ.15,000 வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு: நாளொன்றுக்கு ரூ.35,000 தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டா் வசதி – நாள் ஒன்றுக்கு ரூ.30,000 பிராண வாயுவுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு – நாளொன்றுக்கு ரூ.25,000.
புகாா் தெரிவிக்க: நிா்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால், 1800 4253993 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 104 என்ற தொலைபேசி எண்ணிலோ புகாா் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.