மேற்பரப்பைச் சுரண்டி விட்டுதான் சாலை போட வேண்டும், சாலைகளின் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று நெடுஞ்சாலைத் துறைக்குத் தமிழக அரசு தலைமைச் செயலர் வெ. இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் கடந்த பல பத்தாண்டுகளாக இருந்துவரும் – சாலைகள் எல்லாம் உயர்ந்து வீடுகள் தாழ்ந்துவிடும் – பிரச்சினைக்கு முடிவு வருகிறது.
25, 30 ஆண்டுகளுக்கு முன்னர், சாலைகளைப் பராமரிக்கும் வகையில் புதுச் சாலைகள் இடும்போது ஏற்கெனவே இருக்கும் சாலைகளின் மேற்பரப்பைச் சுரண்டி எடுத்துவிட்டுதான் புதிய சாலைகளை இடுவார்கள்.
காலப்போக்கில் இந்த வழக்கம் மாறி, ஏற்கெனவே இருக்கும் சாலைகளின் மேலேயே புதிதாக மற்றொரு சாலையை இட்டுச்செல்லும் பழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இதனால் சாலைகள் எல்லாம் பல அடிகள் உயர்ந்துவிட்டன. முன்னர் கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் தாழ்ந்துபோய்விட்டன. மழை பெய்தால் சாலைகளில் செல்லும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையும் நிலை பெரும்பாலான இடங்களில் ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடிநீர் – வடிகால் பிரச்சினைகள்.
முந்தைய திமுக அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கோ.சி. மணி, பழைய சாலைகளைச் சுரண்டிவிட்டுதான் புதிய சாலைகளை இட வேண்டும் என்பதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டார். எனினும், நடைபெறவில்லை.
தற்போது சாலைகளின் மட்டத்தைக் கண்மூடித்தனமாக உயர்த்திக் கொண்டே செல்வதைத் தடுக்கும் நோக்கில், இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்குக் கடிதமொன்றைத் தலைமைச் செயலர் இறையன்பு அனுப்பியுள்ளார்.
கடித விவரம்:
“மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும்போது, ஏற்கெனவே உள்ள சாலை மட்டத்தை உயர்த்துவதால் நடைபாதை, வடிகால் உள்பட சாலையின் தன்மை பாதிக்கப்படுகிறது.
“மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகள் ஏற்கெனவே இரண்டு அல்லது மூன்று அடுக்கு அடர்தளம் இடப்பட்டிருக்கும். எனவே, இன்னோர் அடுக்கு அடர்தளமிட்டுச் சாலை மட்டத்தை உயர்த்த வேண்டியதில்லை.
“எனவே, நெடுஞ்சாலைத் துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது, சாலைகளின் மேற்பரப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் அமைக்கும் வகையிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
“மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதி சாலைகள் ஏற்கெனவே போதுமான கனத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால் பிபிடி சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை.
“எந்தச் சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது.
“சாலைகளின் மேற்தளக் கட்டுமானத்தை மட்டும் தேவைப்படும் கனத்துக்குச் சுரண்டி எடுத்துவிட்டு அதேயளவு மேற்தளம் இட வேண்டும். இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது தவிர்க்கப்படும்.
“இந்தப் பகுதி சாலைகளில் தார் மேற்தளத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தார் மேற்தள கனமானது சாலையின் போக்குவரத்து செறிவுக்கேற்ப மாறுபடும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தலைமைச் செயலர் இறையன்பு.