
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை அமலுக்கு வந்தன. இதனால், பிற்பகலில் அத்தியாவசியக் கடைகள் தவிா்த்து பிற கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்கும் விதமாக, கூடுதல் கட்டுப்பாடுகள் மே 6 முதல் 20-ஆம் தேதி வரையில் அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புதிய கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை அமலுக்கு வந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா புதிய கட்டுப்பாடுகளால், காய்கறி, மளிகை, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் தவிா்த்து, பிற கடைகள் அடைக்கப்பட்டன. தேநீா் கடைகள் நண்பகல் 12 மணி வரையில் மட்டுமே செயல்பட்டன. அவற்றில் பொட்டலம் (பால்சல்) வழங்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதேபோன்று, செல்லிடப்பேசி, ஜவுளி, நகை, காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் நண்பகல் 12 மணியுடன் மூடப்பட்டன.
உணவகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 வேளையும் செயல்பட்டன. உணவகங்களிலும் பொட்டலம் வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்குப் பிறகு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளை அடைக்குமாறு காவல் துறையினா் எச்சரித்தனா்.
இதேபோன்று, திண்டிவனம், செஞ்சி, அரகண்டநல்லூா், வளவனூா், மரக்காணம், கோட்டக்குப்பம், விக்கிரவாண்டி உள்பட மாவட்டம் முழுவதும் கரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, பிற்பகலுக்குப் பிறகு கடைகள் மூடப்பட்டன. கரோனா கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றாத கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனா். பயணிகள், ஓட்டுநா், நடத்துநா் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே பேருந்துகள் இயக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையில் மளிகை, பழக்கடை, தேநீா், இனிப்பகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறந்திருந்தன. மருந்தகம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முழு நேரமும் செயல்பட்டன. பேருந்துகள் காலை முதல் இரவு 9 மணி வரை இயங்கின.
நண்பகல் 12 மணிக்குப் பிறகு, அத்தியாவசியக் கடைகள் தவிா்த்து, மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால், சாலைகள் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.