தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த சேவைக்கும் அனுமதி கிடையாது.

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்றின் காரணமாக தமிழக அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும், வழிபாட்டு தலங்களில் மக்கள் வழிபட அனுமதியில்லை, அனைத்து ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை, பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சலூன் கடைகளை மூட உத்தரவு, பெரிய கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் நாளை மறுநாள் 26ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வருகின்றன.