
‘தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சரியானது ; அரசியல் சாசன பாதுகாப்பு பெற்றது’ – உச்சநீதிமன்றம் !
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு சரியானதுதான்; அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது; தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீட்டு வரம்பை தாண்டி செல்லலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மராத்தி ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மேலும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் மராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் இந்த வழக்கு விசாரிக்கபட உள்ளது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, நாகேஸ்வர ராவ், அசோக் பூஷண், அப்துல் நசீர், ரவீந்தர பட் ஆகியோர் அடங்கிய அரசியல் பெஞ்ச் முன்பாக மராத்தா இடஒதுக்கீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்திரா சஹானி அல்லது மண்டல் வழக்கில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீடு வரம்பைத்தான் கடைபிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இதனை மாற்றி அமைக்க வேண்டுமா? என்பது குறித்து அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. மேலும் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இன்றைய விவாதத்தின் போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீடு வரம்பை மீறலாம். தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இது சரியானது. இந்த 69% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பையும் பெற்றுள்ளது என குறிப்பிட்டனர்.