
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் சேவை, ஏப்., 1ம் தேதி முதல் அமலாக உள்ளது.
தமிழகத்தில், அனைத்து பிரிவுகளுக்கும், மின் இணைப்பு வழங்கும் பணியை, மின் வாரியமே மேற்கொள்கிறது. ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறொருவரின் பெயருக்கு மாற்ற, வாரியத்தின் பிரிவு அலுவலகங்களில், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, 300 ரூபாய் கட்டணம். இருப்பினும், அதை விட, அதிக தொகையை ஊழியர்கள் கேட்கின்றனர். தரமறுத்தால், உரிய ஆவணங்கள் இருந்தாலும், விண்ணப்பதாரரை அலைக்கழிக்கின்றனர்.
இதையடுத்து, மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டது. அந்த சேவையை, ஏப்ரல், 1ம் தேதி முதல் அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு, சொத்து விற்பனை பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் போது, மின் இணைப்பின் உரிமையாளர், புதிய உரிமையாளருக்கு சொத்தை மாற்றியதற்காக வழங்கும் ஒப்புதல் கடிதத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மின் இணைப்பு பெற்றுள்ள உரிமையாளர் இறக்கும் பட்சத்தில், பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் போது, சொத்து வரி ரசீதை பதிவேற்றம் செய்ய வேண்டும்.