இரட்டை பச்சிளம் குழந்தைகள்; தூக்கிச் சென்ற குரங்குகள்! – தஞ்சையை பதறவைத்த குழந்தையின் மரணம்


தஞ்சாவூரில் வீட்டுக்குள் படுக்க வைத்திருந்த பிறந்து ஏழு நாட்களே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளை வீட்டிற்குள் புகுந்து குரங்குகள் தூக்கி சென்றதில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் நகர பகுதியில் உள்ள மேலவீதி கோட்டை அகழியைச் சேர்ந்தவர் ராஜா(29). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (26). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிற நிலையில், ஏற்கெனவே ஜீவிதா(5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 7 தினங்களுக்கு முன்பாக புவனேஸ்வரிக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதனால் புவனேஸ்வரிக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னரே மருத்துவமனையிலிருந்து புவனேஸ்வரி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். நம்ம குழந்தையை எந்த சிரமும் இல்லாமல் வளர்த்து பெரிய ஆள வளர்க்கணும் என தன் கணவரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் இரண்டு குழந்தைகளுக்கும் பாலூட்டி, வீட்டின் நடுவே படுக்க வைத்து விட்டு புவனேஸ்வரிக்கு வீட்டிற்கு வெளியே மற்ற வேலைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓட்டை பிரித்து கொண்டு இரண்டு குரங்குகள் வீட்டிற்குள் இறங்கின.

பின்னர் குழந்தைகள் படுத்திருந்ததை பார்த்த இரண்டு குரங்குகளும், தன் குட்டியை எப்படி அணைத்து தூக்கி கொண்டு தாவி ஓடுமோ அதே போல ஒவ்வொரு குழந்தையை தனி தனியாக தூக்கி கொண்டு தாவி குதித்து ஓடின. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து சத்தமிட்டனர். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே இப்பகுதியில் குரங்குகள் தொல்லை இருப்பதால் வழக்கம் போல் வீட்டிற்குள் இருந்த பொருள் எதையோ தூக்கி சென்று விட்டது என புவனேஸ்வரி நினைத்துள்ளார்.

ஆனால் வீட்டிற்குள் சென்ற புவனேஸ்வரி குழந்தைகள் காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பதறி துடித்து குழந்தைகளை குரங்கு தூக்கி சென்றதாக கதறியிருக்கிறார். மேலும் அங்கிருந்தவர்களும் பதை பதைப்புடன் கூச்சலிட்டபடியே குரங்கை தேடினர். அப்போது வீட்டின் மேற்கூரையில் ஒரு குரங்கு கையில் ஒரு குழந்தையை வைத்திருந்தது. குழந்தை அழுது கொண்டிருந்தது. பின்னர் புவனேஸ்வரி மற்றும் சிலர் குரங்கை பார்த்து கத்தினர். இதையடுத்து குழந்தையை அப்படியே போட்டு விட்டு சென்றது அந்த குரங்கு. பின்னர் அந்த குழந்தை பத்திரமாக மீட்டு பார்த்ததில் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. இது அவர்களுக்கு நிம்மதியை தந்தாலும் மற்றொரு குழந்தையை பரபரப்பும் தவிப்புமாக அப்பகுதி முழுவதும் தேடத் தொடங்கினர்.


இதில் வீட்டின் பின்புறம் உள்ள கோட்டை அகழி எனப்படும் குளத்து கரையில் மற்றொரு குழந்தையை விட்டு சென்றதை கண்டுபிடித்தனர். பின்னர் உடனடியாக அந்த குழந்தையை இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்ட புவனேஸ்வரி அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். `ரெட்டை புள்ளையில ஒத்த புள்ளைய அநியாம பறிகொடுத்துட்டேன். இனி நான் என்ன செய்யப் போறேன்’ என கதறியவரை எந்த வார்த்தையும் கூறி தேற்ற முடியாமல் தவித்தனர் உறவினர்கள். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக புவனேஸ்வரி, `எங்க ஏரியாவுல ஒரு வருடத்திற்கு மேலாக சுமார் 20 குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. அதனை எங்களால தாங்க முடியலை. இதனை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்க தெருக்காரங்க வனத்துறையை சேர்ந்த அதிகாரிங்க கிட்ட புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

அதிகாரிங்க அலட்சியத்தால் ஒரு பச்ச உசுரு பலியாகி விட்டது. ரெண்டு கண்ண கொடுத்த ஆண்டவன் ஒரு கண்ண பிடிங்கிட்டான். இத எப்படி நான் மறக்கப் போறேன். என் பவுனு முகம் அப்படியே நெஞ்சுக்குள்ளேயே இருக்கு’ என அழத் தொடங்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும்,பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் கோட்டகுப்பதில் பல ஆண்டுகளாக குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தெருக்களில் ஹாயாக சுற்றித் திரியும் இந்த குரங்குகள் தினமும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்களை துரத்துகின்றன. குழந்தைகளிடம் ஏதாவது பொருட்கள் வாங்கி அதை அபகரிக்க துரத்துவதால் குழந்தைகள் பயந்து அலறியடித்து ஓடுகின்றனர். அதுமட்டுமின்றி வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்கின்றன.துரத்தினால், கடிக்கப் பாய்கின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் மக்கள் வெளியே நிம்மதியாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சை போல் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக, கோட்டகுப்பதில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடித்து காட்டில் விட பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி : விகடன்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s