
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. 2021, ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது முடிந்தவர்களாக இருப்பவர்களைக் கணக்கிட்டு திருத்த பணியை மேற்கொள்ளுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று சென்னையில் வெளியிட்டார்.
https://tnsec.tn.nic.in/tn_election/electoral_roll_download.php
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்தப் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புபவர்கள், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.
வரும் 21, 22-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களிலுள்ள வாக்குச்சாவடி அதிகாரியிடமும் விண்ணப்பங்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஜனவரி மாதம் 5-ம் தேதியன்று இறுதி செய்யப்படவிருக்கின்றன. ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.